Sunday, November 6, 2011

யாழ்ப்பாணம் - ஒரு கண்ணோட்டம்

தற்காலத்தில் யாழ்ப்பாணம் என்பது, இலங்கையின் வட மாகாணத்தைச் சேர்ந்த 5 மாவட்டங்களில் ஒன்றாக அதன் வட கோடியில் அமைந்துள்ள மாவட்டத்தையும், அம்மாவட்டத்தின் பிரதான நகரத்தையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை விட போர்த்துக்கீசர் கைப்பற்றுவதற்கு முன்னர் இலங்கையின் வடபகுதியில், இருந்துவந்த தமிழர் நாடும் யாழ்ப்பாண அரசு என்றே குறிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் என்ற பெயர் வந்த வரலாறு பற்றி, ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இலங்கையில் தமிழ், சிங்கள இனங்களுக்கிடையே முரண்பாடுகள் உச்சக்கட்டத்திலிருக்கும் இக்காலத்தில், இரண்டு இனங்களையும் சேர்ந்தவர்கள் தங்கள் தங்கள் கொள்கைகளுக்குப் பொருந்தும் விதத்தில், வெவ்வேறு ஆய்வாளர்களின் முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்கள்.
18ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இயற்றப்பட்ட யாழ்ப்பாணத்தின் வரலாறு கூறும், யாழ்ப்பாண வைபவமாலை எனும் நூல், முற்காலத்தில் இலங்கையை ஆண்ட அரசனொருவனால், இந்தியாவிலிருந்து வந்த யாழிசையில் வல்ல குருடனான யாழ்ப்பாணன் ஒருவனுக்கு வட பகுதியிலிருந்த மணற்றி (அல்லது மணற்றிடல்) எனும் இடம் பரிசாக அழிக்கப்பட்டதென்றும், அப்பகுதி யாழ்ப்பாணம் என்று பெயர் பெற்றுப்பின்னர் முழுப்பிரதேசத்துக்குமே இப்பெயர் வழங்குவதாயிற்று என்றும் கூறும். இம்மணற்றி என்னும் பெயர் இறையனார் அகப்பொருள் உதாரணச் செய்யுட்களில் வருகின்றது.
வேறு சிலர், நல்ல ஊர் என்னும் கருத்தைத் தருகின்ற சிங்களச் சொல்லான, யஹபனே என்பதிலிருந்தோ, அல்லது சிங்கள இலக்கியங்கள் சிலவற்றில், இப்பகுதியைக் குறிக்கப் பயன்பட்ட, யாபாபட்டுன என்ற சொல்லிலிருந்தோ மருவி வந்ததே யாழ்ப்பாணம் என்கிறார்கள். எனினும் யாழ்ப்பாணம் என்ற பெயரில் இருந்தே யஹபனே, யாபாபட்டுன ஆகிய சொற்கள் மருவி வந்ததாக கொள்ளப்படுகிறது.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.